Skip to content
Home » வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன்   பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் அவமதிக்கும் வகையில் மகாவிஷ்ணு பேடியிருந்தார். இதற்காக கடந்த செப்.7ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை, சென்னை சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஸ்ரீனிவாசம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.  இந்நிலையில் மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சென்னை காவல்துறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. மனு மீதான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வந்தது. இந்த மனு மீது விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்போது சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் சொற்பொழிவாற்றிய வழக்கில் கைதான மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் விலகுவதாக அறிவித்தார். மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்துள்ளது. மகாவிஷ்ணு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகியுள்ளார். அதே சமயம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை மகாவிஷ்ணு திரும்ப பெற்றார். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், வழக்கில் தானே வாதாடி கொள்வதாகவும் மகாவிஷ்ணு நீதிபதியிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!