அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி அரியலூர் ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில் கல்வெட்டுகள் சுத்தம் செய்யப்பட்டதை பார்வையிட்டு தொடர்ந்து மழைநீர் தேங்காத வண்ணம் முறையாக தொடர்ந்து பராமரித்திட சம்மந்தப்பட்ட
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வி.கைகாட்டியில் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் விழுந்த மரக்கிளையினை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படாதவாறு பணிகளை விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், திருமானூர் ஊராட்சியில் புள்ளம்பாடி வாய்க்காலில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சுத்தம் செய்யப்பட்ட கல்வெட்டு மூலம் மழைநீர் வெளியேறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாய்க்கால்களை தொடர்ந்து பராமரிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, திருமானூரில் உள்ள நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைமானியை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்ற ஆண்டின்
மழை அளவு மற்றும் தற்போது வரை பெய்துள்ள மழையின் அளவுகள் குறித்தும் கேட்டறிந்ததுடன் மழை அளவுகளை தொடர்ந்து கண்காணித்திடவும் அறிவுறுத்தினார். மேலும், ஆற்றுப்பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது குறித்தும், அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், அருளப்பன் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.