அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்ததாவது,
அரியலூர் மாவட்டத்தில், பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள நிவாரண மையங்களை ஆய்வு செய்து, அம்மையங்களில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்கவும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிடவும் மாநில பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற காவலர்களை தயார் நிலையில் வைத்திடவும் பொதுவிநியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் இப்பருவமழை காலங்களில் 2 மாதங்கள் இருப்பு வைத்திருக்கவும் மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி, ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட், போன்ற உபகரணங்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்கவும் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவும் ஏரி, மதகுகள், குளம் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரப்படவும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திடவும் உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்களின் இருபுறமும் மழைநீர் எளிதாக செல்லும் வண்ணம் அடைப்புகள் சுத்தம் செய்திடவும் போதுமான அளவில் மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு குச்சிகள் தேவைப்படும் இடங்களில் முன்கூட்டியே இருப்பு வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் வைத்திடவும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடவும், மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தன்னார்வ அமைப்புகளை பயன்படுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திடவும், பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து அவைகளை உடனடியாக இடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அக்கட்டிங்களை முழுமையாக பயன்படுத்துவதை தவிர்க்கவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்(அரியலூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.