சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகும். இவர், சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். ஜெய்கணேசுக்கு திருணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜெய்கணேஷ், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு, அதே பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார். அதன்பிறகு இரவு வீடு திரும்பினார். ராஜீவ் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டின் அருகே சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வக்கீல் ஜெய்கணேசை சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெய்கணேஷ், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெய்கணேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துரைபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜெய்கணேஷ், கிரிக்கெட் விளையாடிவிட்டு வீடு திரும்பியபோது அவரை ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் பின்தொடர்ந்து சென்று திட்டம் போட்டு கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஜெய்கணேஷ் வீட்டுக்கு வந்த வழியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். வக்கீல் ஜெய்கணேஷ் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. ரவுடிக்கும்பலை சேர்ந்த சிலரே இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது ரவுடி கும்பலுக்காக கோர்ட்டில் வாதாடியதால் எதிர்தரப்பை சேர்ந்த ரவுடி கும்பல் அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.