அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று அளித்த பேட்டி:
திமுகவும், பாஜகவும் மறைமுக உறவு வைத்து உள்ளது என்று நாங்கள் சொன்னதை இப்போது மக்கள் சொல்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்கப்படுமா என்று கேட்டதற்கு தேர்தல் கூட்டணி குறித்து அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும், யூகங்களுக்கு பதில் தரமுடியாது என்று எடப்பாடி கூறினார். ஒத்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வலிமையாக அமைக்கும். அது வெற்றி கூட்டணியாக இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்பது என்பது விஜய் கொள்கை. அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
அதிமுக வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. கூட்டணி வேறு, கொள்கை வேறு. எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. நல்லவர்களை பாராட்டுவதில் என்ன தவறு ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர். அவரை எல்லோரும் பின்பற்றுகிறார்கள்.
விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்றால் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். விஜய் அவரது கொள்கையை தெரிவித்து இருக்கிறார். தவெக கொள்கை என்பது அவர்களின் நிலைப்பாடு. அது தவறா, சரியா என நாம் விமர்சிக்க முடியாது.
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி குறித்து பேசுவது சரியாக இருக்கும். திமுக கூட்டணிக்கு கொள்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.