சட்டமன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, திருக்குறள் வாசித்து சபை நடவடிக்கைகளை தொடங்கினார். முதலில் கேள்வி நேரம் என அறிவித்தார். அப்போது அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் எழுந்து நின்று கள்ளக்குறிச்சி சாராய சாவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம் என்று அப்பாவு கூறினார். அதை எதரிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. அப்போது எதிர்கட்சியினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் போட்டனர். இன்று சட்டமன்றத்துக்கு அதிமுக, பாமக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
அமைதி காக்கும்படி சபாநாயகர் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அதிமுகவினர் கள்ளச்சாராய சாவு குறித்து ஒரு காகிதத்தில் எழுதி அதை சபாநாயகருக்கு காட்டியபடி கோஷம் போட்டனர். அப்போது அவை முன்னவர் துரைமுருகனை பேசும்படி சபாநாயகர் கூறி்னார். அவரையும் பேச விடாமல் அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.
எனவே சபை காவலர்களை அழைத்த சபாநாயகர், ரகளையில் ஈடுபடும் உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட அதிமுகவர் வெளியேற்றப்பட்டனர். சிலர் வெளியேற்றினர். ஆனால் உதயகுமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் சபையில் படுத்து உருண்டனர். அவர்களையும் சபை காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். சிலர் தரையில் அமர்ந்த கோஷம் போட்டினர். அவா்களையும் வெளியேற்றினர். இந்த வெளியேற்றம் 12 நிமிடத்தில் முடிந்தது. அதன் பிறகு அமைச்சர் துரை முருகன் பேசினார்.
சபைக்கு வெளியிலும் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.