அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு.
மருத்துவத் துறையிலும், மருத்துவக் கல்வியிலும், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. மாநில சுயாட்சி என்ற கொள்கையில் நாம் உறுதியாக இருக்கிறோம். எந்த நிலையிலும் தமிழ் நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற எந்த சட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரித்ததில்லை. நாடாளுமன்றத்தில் தேசிய மருத்துவக் குழுமம் சட்ட மசோதாவை கொண்டுவந்தபோதே கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது கவுன்சிலிங் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல. இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் தற்போதுள்ள நடைமுறையிலேயே எம்.பி.பி.எஸ் மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தேசிய மருத்துவக் குழுமத்தை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.