அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் மர வியாபாரம் செய்து வருகிறார். மேலும் அதிமுக கிளை செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் ஆண்டிமடம் செல்வதாக கூறிச் சென்றவர், நெட்டிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள முந்திரி வயலில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகராஜ் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.