அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவான நிர்வாகிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்தார். கட்சியில் 75 மாவட்டங்கள் இருந்தன. அதில் சில மாவட்டங்களை பிரித்து அமைப்பு ரீதியாக 88 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களையும் அவர் நியமனம் செய்தார்.
இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 10 மணிக்கு கூட்டி உள்ளார். சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிய அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் 27ம் தேதி கூட்டி உள்ளார். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், செய்தி தொடர்பாளர்கள் கலந்து கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓபிஎஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கூட்டத்தை எடப்பாடி கூட்டி உள்ளதாக கூறப்படுகிறது.