கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தார். அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சரண்யா. இவர்கள் 2 பேரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில் ஜெகன்-சரண்யா ஆகியோர் காதலித்தனர். இவர்களின் காதலுக்கு சரண்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் திருமணம் செய்ய எதிர்ப்பும் கிளம்பியது. காதலை கைவிடும்படி ஜெகனுக்கு, சரண்யாவின் தந்தை சங்கர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தான் எதிர்ப்பை மீறி ஜெகன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜெகன்-சரண்யா ஜோடி காதல் திருமணம் செய்தது. கோவிலில் வைத்து சரண்யாவை, ஜெகன் கரம் பிடித்தார். இதையடுத்து இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஜெகனை, சரண்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கொலையாளி உடனடியாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கொலை செய்த சங்கர் அதிமுக கிளை செயலாளர் என முதல்வர் கூறினார்.
சங்கரை அதிமுக செயலாளர் என கூறியதை கண்டித்து அதிமுகவினர் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் அதிமுக இல்லை என்றால், எழுத்துபூர்வமாக கூறுங்கள் என சபாநாயகர் கூறினார்.