ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். 5-வது சுற்று முடிவிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 26 ஆயிரம் வாக்குகள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும் தேமுதிக 4-வது இடத்திலும் உள்ளது.
வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வந்திருந்தார். 4 சுற்றுகள் எண்ணி முடித்தபோது தொடர்ந்து அவர் பின்னடைவையே சந்தித்து வந்தார். இதனால் அவர் அங்கிருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். செல்லும் போது செய்தியாளர்கள் சந்திப்பில், “ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்று விட்டது” என்று கூறிவிட்டு சென்றார்.