தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டுமென அதிமுக சார்பில் சபாநாயகரிடம் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக பல முறை கடிதம் அளித்துள்ளது. நேரிலும் சந்தித்து வலியுறுத்தினர். ஆனால், அதிமுகவின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து வருகிறார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 10 முறை கடிதம் அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுவிடம் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. இருக்கை விவகாரத்தில் சட்டப்படியே நடக்கிறேன்’ என்றார். சபாநாயகரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர் உத்தரவின் பெயரில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.