திருச்சியில் இன்று வடக்கு அதிமுக சார்பில் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முனனாள் அமைச்சர்கள் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் தங்கமணி, அமைப்புச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என பழனிசாமி கூறிவிட்டார். தங்கமணியையும், என்னையையும் அழைத்து ‘நீங்கள் பேட்டி கொடுத்து கூட்டணியை கெடுத்து விடாதீர்கள்’ என்றார். ‘நாங்கள் எதற்கு கெடுக்க போகிறாம். கூட்டணி இருந்தால் நல்லது தானே’ என்றோம். அதற்கு அவர், ‘நீங்க யாரையாவது திட்டி விட்டு வந்துவிடுவீர்கள். அவர்கள் கோபித்து கொள்வார்கள். நீங்கள் பேசியதற்கு அப்புறம் என்ன அப்படி பேசிவிட்டார்’ என்பார்கள். ‘அண்ணா பார்த்துக்கோங்க’ என எங்களிடம் அவர் கையெடுத்து கும்பிடுகிறார். ‘எதற்கு வம்பு, நாங்கள் நிருபர்களை பார்க்கிறது இல்லை’ என்றேன். வரும்போது கூட மைக்கை நீட்டினர். ‘வணக்கம் ஐயா… வணக்கம் ஐயா…’ என போய் விட்டோம். அவர்களுக்கு பரபரப்பு வேண்டும். அவர்களுக்கு செய்தி வர வேண்டும். இதை சொன்னால், கட்சியை விட்டு பழனிசாமி எங்களை நீக்கிவிடுவார். இப்படி கொடுமை போய் கொண்டு உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், பொறுப்பு வேண்டும். கூட்டணி விவகாரத்தில் நரக வேதனையில் உள்ளார். யார் வந்தாலும் சும்மாவா வருகிறார்கள்.’ 20 சீட் வேண்டும். 50 கோடி ரூபாய் ரொக்கமாக கொடுங்கள். ரூ.100 கோடி கொடுங்கள்’ என கேட்கிறார்கள்.நெல், அரிசி விற்பனை மாதிரி பேசுகிறார்கள். எங்கே போவது. அதிமுக மார்க்கெட் போய் கொண்டுள்ளது. பழனிசாமி பற்றி தான் மக்கள் பேசுகிறார் என ஒரு கட்சி தலைவர் சொல்கிறார். ஏன் கொஞ்சம் ரூபாயை குறைத்து கொண்டால் என்னவென்றால், இதை வைத்து தான் ‘பிசினஸ்’ நடத்துகிறோம் என்றார். இப்படி ஓடிக் கொண்டு உள்ளது. இந்த கொடுமையில் பழனிசாமி மாட்டிக் கொண்டு உள்ளார். அந்த ரணத்தோடு பேசிக் கொண்டுள்ளார். நல்ல செய்தி வரும். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.