கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று பின்னர் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்தார்.
அப்போது அதிமுக பாஜக கூட்டணி 11 இடங்களிலும், திமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அதிமுகவில் இருந்த 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு மாறினார். திமுக கவுன்சிலர் அதிமுகவிற்கு அணி மாறினார். திமுக கவுன்சிலர் ஒருவர் அதிமுகவிற்கு அணி மாறியதால் திமுகவின் பலம் 11 ஆக இருந்தது.
இந்த நேரத்தில் திமுக கவுன்சிலர்கள் அதிமுக ஒன்றிய குழு தலைவர் லதா, அதிமுக தோகைமலை மேற்கொண்டியச் செயலாளர் ரங்கசாமி ஒன்றிய பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், டெண்டர் ஊழல் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தில் அதிக தலையீடு இருந்ததாக கூறி ஆர்டிஓ புஷ்பாதேவி முன்னிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதில் 11 திமுக கவுன்சிலர் ஒரு பாஜக கவுன்சிலர் 12 பேர் தீர்மானத்திற்கு ஆதரவளித்ததால் லதா ரங்கசாமி தனது பதவியை இழந்தார்.
இது குறித்து லதா ரங்கசாமி செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில் :
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தான் கவுன்சிலராக போட்டியிட்டு பின்னர் கட்சி தலைமையின் பெயரில் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் தான் எந்தவித முறைகேடுகளில் ஈடுபடாமல் சிறப்பாக நிர்வாகப் பணியாற்றி வந்ததாகவும், அனைத்து கவுன்சிலருக்குமே ஒன்றிய குழு பொது நிதியை தான் சரிசமமாக பிரித்தும் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் செய்து வந்ததாகவும், ஆனால் 2021 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர்
அதிமுகவிலிருந்து 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு மாறியதாகவும் இதற்கு தோகைமலை ஒன்றிய பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தான் காரணம் என்றும், தான் ஒன்றிய குழு பதவியை இழந்தது கூட அதனால் தான் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் உட்கட்சி பூசலால் தனது பதவியை இழந்துள்ளாதகவும் கூறினார்.
மேலும் கடந்த தேர்தலில் காலங்களில் குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுக எனக்கு கோட்டையாக இருந்ததாகவும் அதில் தோகைமலை ஒன்றியத்தில் அதிமுக பலமான கட்சியாக இருந்த போதிலும் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசலால் அதிமுக தனது செல்வாக்கை இழந்து வருவதாகவும், எனவே மாநில கட்சி தலைமை மற்றும் மாவட்டம் செயலாளர் இதில் கவனம் கொண்டு கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
அதிமுகவில் இருந்த 8 ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவிற்கு அணி மாறிய போதிலும் அப்போது கூட்டணி கட்சியாக இருந்த பாஜக கவுன்சிலர் ஆதரவு அளித்ததால் தான் தைரியமாக இருந்த நிலையிலும், மார்ச் எட்டாம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போதும் பாஜக கவுன்சிலர் தங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று பாஜக மாவட்ட தலைவர் மற்றும் மாநில தலைவர் கூறி இருந்த நிலையில் தற்போது அவரும் பணத்திற்காக விலை போய் தனக்கு எதிராக வாக்களித்ததாகவும்,
மேலும் தன்னை திமுகவிற்கு கட்சி மாற அழைத்த போதிலும் தான் வர முடியாது என மறுத்ததாலும், நிர்வாகத்தில் தன் மீது எந்தவித குறைகளும் கூற முடியாமல் இருந்த நிலையில் எனது கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதாகவும் கூறினார்.
மேலும் தோகைமலை ஒன்றியத்தில் அதிமுகவினுடைய உட்கட்சி பூசல் மிகவும் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுவே ஒன்றிய குழு தலைவரின் பதவி பறிபோக காரணம் என ஒன்றிய குழு தலைவர் உட்பட கட்சி நிர்வாகிகளும் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.