Skip to content
Home » அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

  • by Senthil

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளதும் ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என்று கூறி திருச்சியில் வருகிற 24ஆம் தேதி அதிமுக முப்பெரும் விழா மாநாடு நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.மேலும் கடந்த 10ஆம் தேதி திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில்

மாநாடு நடத்துவதற்கான பணிகளை தற்போது ஓபிஎஸ் அணியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான கால்கோள் நடும் விழா நடைபெற்றது.இதில் வெல்லமண்டி நடராஜன், குப கிருஷ்ணன் உள்ளிட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சியில் வரும் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு பிறகு எடப்பாடி தரப்பினர் சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். திருச்சி மாநாடு ஓ.பன்னீர்செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஓபிஎஸ்ஸுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஓபிஎஸ் தனது அரசியல் நகர்வில் புதிய அத்தியாயம் எனக் கருதும் திருச்சி மாநாட்டுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேசியது… வரலாற்று சிறப்பு மிக்க திருச்சியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமையில் மாநாடு குறிப்பிட்ட , நாட்களில், தேதியில் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு பிடிக்கதாக சிலர் இந்த மாநாடு நடக்காது என கூறுகிறார்கள்.மேலும் எம்.ஜி.ஆர் அவர்கள் கொடுத்த கொடி இது, ஆகையால் அவர் கொடுத்த கொடியை பயன்படுத்துவதை எவருக்கும் தடுக்க உரிமை இல்லை. எந்த நீதிமன்றமும் கொடியை பயனப்டுத்த தடை விதிக்கவில்லை, குறிப்பாக இந்த கொடியின் கீழ் தான் எங்களது கோட்டை கொத்தளம் அமைக்கப்படும். இந்த மாநாட்டில் மக்களின் எதிர்காலத்தை , தமிழ்நாட்டின் எதிர்காலைத்தை தீர்மானிக்க ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் எடுக்க உள்ளார். நாங்கள் கட்சியை தொடங்க என்ன காரணம், நாங்கள் ஏன் புதிய கட்சி தொடங்க வேண்டும், எங்களுக்கு என்று கட்சியை தலைவர் எம்.ஜி.ஆர் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.இந்த கட்சியை காப்பாற்ற வல்லமை எங்களுக்கு உள்ளது. நாங்கள் புதிய கட்சியை தொடங்க அவசியம் இல்லை .

நாங்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவோம், இதனால் ஓராயிரம் வழக்குகள் தொடர்ந்தாலும் அதை நாங்கள் சந்திக்க தயார் என்றார். இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் DC சுரேஷ்குமார் இடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியது.. அதிமுக கொடியும் சின்னத்தையும் திருச்சியில் ஓபிஎஸ் அணியினர் நடத்தும் மாநாட்டில் பயன்படுத்தக்கூடாது அப்படி பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!