தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது” என்று அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.பி. தம்பிதுரை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி சரியான கூட்டணியை அமைத்திருக்கிறார். வக்பு மசோதா வருவதற்கு முன்பே, எடப்பாடி பழனிசாயி அமித் ஷாவைச் சந்தித்தார். அதிமுக எப்போதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி என்பதை எடுத்துக்கூறினார். ஜெயலலிதாவும் அப்படித்தான் இருந்திருக்கிறார் என்பதையும் எடுத்துக்கூறினார். இதன் காரணமாகவே, அதிமுக எம்பிக்கள் 4 பேரும் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களித்தோம். எனவே, இஸ்லாமிய மக்கள் எங்களைவிட்டு செல்லவில்லை. அவர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அதிமுக வாக்கு வங்கி குறையாது,
இஸ்லாமியர்களுக்கு ஆபத்து இருந்தால், நாங்கள் இந்த கூட்டணியில் சரியான முறையில் குரல் கொடுப்போம். விட்டுக்கொடுக்க மாட்டோம்.
எடப்பாடி பழனிசாமி ஏழை விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு அடித்தட்டு மக்களின் சிரமங்கள் புரியும். பாஜகவோடு அதிமுக திடீரென கூட்டணி அமைக்கவில்லை. சென்ற செயற்குழு, பொதுக்குழுவில் அவருக்கு முழு அதிகாரம் தரப்பட்டது.
அந்த ஜனநாயக அடிப்படையில்தான் இப்போது அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் ஓட்டு அதிமுகவுக்கே அதிகம் வரும். குறைய வாய்ப்பே இல்லை.
பழனிசாமி நேற்று சரியாக சொல்லி இருக்கிறார். 1952 முதல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. ராஜாஜி காலம் முதல் இதுவரை கூட்டணி ஆட்சி இருந்தது கிடையாது. தனிப்பெரும்பான்மை இல்லாதபோதும் ராஜாஜியும், கருணாநிதியும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை. எனவே 2026ல் அதிமுக வெற்றி பெற்றால் தனித்து தான் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இருந்ததும் கிடையாது. இருக்கப்போவதும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.