அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த முல்லை வளவன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவர் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வரனாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளர் உறுதிமொழி படிவம் வாசிக்க கொடுத்த பொழுது, தான் வேட்பாளரின் சார்பாக முன்மொழிபவராக வந்துள்ளதாகவும், சந்திரகாசி என்பவருக்கு தான் வேட்பு மனு தாக்கல் செய்வதாகவும் கூறினார். இதனையடுத்து அவர் கொண்டு வந்த வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா பெற்றுக்கொண்டார்.
அந்த வேட்புமனுவில், வேட்பாளர் சந்திரகாசி சுயேச்சையாக போட்டியிடுவதற்கான 10 பேர் முன்மொழிந்து வேட்பு மனு படிவம் வழங்கப்பட்டது. வேட்பாளர் வராவிட்டாலும் முன்மொழிபவர் மனு தாக்கல் செய்ததால், மனு தற்பொழுது பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இருந்தாலும் முன்னாள் எம்பி ஆன சந்திரகாசி, தான் வேட்பு மனு தாக்கல் செய்ய வராமல், முன்மொழிவர் மூலம் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு வேட்புமனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் மீண்டும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், சந்திரகாசி சுயேட்சையாக போட்டியிடுகிறா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது தற்பொழுது பேசும் பொருளாகியுள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுகவை சேர்ந்த சந்திரகாசி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேட்பாளர் சந்திரகாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து தனது வேட்பு மனுளுக்கான உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு சென்று உள்ளார். அதிமுகவுக்கு மாற்று வேட்பாளராக களம் காணுகிறாரா அல்லது சுயேசையாக களம் காண போகிறாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.