கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தா.மலரவன், 2001-ல் அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மேற்கு தொகுதியிலும், 2011-ல் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டு எம்எல்ஏ-வானார்.
அதிமுக தொடங்கியது முதல் கட்சியில் இருந்த இவர், கோவை மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு மலரவன் என்று பெயர் வைத்தது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆவார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தீபா கட்சியில் இணைந்த மலரவன், அதிலிருந்து விலகிமீண்டும் அதிமுகவில் இணைந்தார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அவர் காலமானார். தொடர்ந்து, அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.