தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருந்தார்இந்த பேட்டி அதிமுகவினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏக்கள், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு, கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு, வர இருக்கும் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணாமலையின் பேட்டி குறித்து முக்கிய நிர்வாகிகள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் என பலரும் காரசாரமாக பேசினர். அண்ணாமலை மன்னிப்பு கேட்க வலியுறுத்த வேண்டும். அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யுங்கள். மக்களவை தேர்தல் நமக்கு எந்த நன்மையும் தரப்போவதில்லை.
இனியும் அண்ணாமலை பேச்சை நாம் தாங்கிகொண்டிருக்க வேண்டாம். பாஜக தலைமை அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த கூட்டத்திலேயே அண்ணாமலை பேச்சுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதை இப்படியே விட்டு விட்டால், வரும் காலத்தில் இதைவிட மோசமாக பேசுவார்கள். எனவே நாம் இப்போதே நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலையை கண்டித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதில் அதிமுக – பாஜக கூட்டணியை முறிக்கும் வகையில் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் நட்டா, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் மனு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.