தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38). திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார்.
நேற்று இரவு 10 மணி அளவில் பழமார்நேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பிரபு உட்கார்ந்து இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் பிரபுவை வெட்டிக்கொன்றனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினார். தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கொலை செய்யப்பட்ட பிரபுவின் மனைவி சரண்யா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரில் பழமார்நேரி சாலையில் உள்ள பாரதிராஜாவுக்கும் தனது கணவருக்கும் இடம் குறித்து பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனையில் தற்போதைய பேரூராட்சி திமுக கவுன்சிலர் பாஸ்கரன் பாரதிராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். நேற்று இரவு பாரதிராஜா, மணிகண்டன், ரமேஷ் ,மஸ்தான் என்கிற நாகராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து கணவரை வெட்டி கொலை செய்து விட்டனர் என்று கூறி உள்ளார். இந்த கொலையைத் தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் போலீசில் சரண் அடைந்தனர்.