ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். அந்த தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க போட்டியிட வேண்டும் என எடப்பாடி விரும்புகிறாராம். அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் ஈரோட்டில் தோல்வி அடைந்தால், ஒட்டுமொத்த தனது அரசியல் வாழ்வும் அஸ்தமனமாகிவிடும் என்ற பயமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஏற்கனவே அங்கு போட்டியிட்ட தமாகாவுக்கு விட்டு கொடுத்து விட்டு தப்பித்து விடலாம் என்றும் கருதுகிறாராம். என்ன நடக்க போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்