‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரிலான மாநாடு, அக்கட்சி பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் மதுரையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக, மாநாட்டு பந்தலிலே மூன்று இடங்களில் பிரம்மாண்ட உணவுக் கூடங்கள் அமைத்து 10,000 தொழிலாளர்கள் உணவு சமைத்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சாம்பார் சாதம், புளியோதரை சாதம் போன்றவை தயார் செய்து வழங்கப்பட்டது. மொத்தம் 10 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டதாக மாநாட்டு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா தெரிவித்து இருந்தனர். காலை 8 மணி முதல் மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டிருந்த உணவுக் கூடங்களில் உணவுகள் வழங்கப்பட்டன. மூன்று வேளை மட்டுமில்லாது, காலை 8 மணி முதல் இரவு வரை உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன. மாநாடு முடிந்த நிலையில் நேற்று மாநாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக டன் கணக்கில் தொண்டர்களுக்காக தயார் செய்த புளியோதரை உணவுகள் கொட்டப்பட்டு கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.. இப்படி பொறுப்பு இல்லாமல் மாநாட்டு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உணவினை கொட்டிச் சென்றது அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.