சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தொண்டர்கள் உணர்ச்சிவசப்படும் போது தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் இது போன்ற செயல்கள் கண்டனத்திற்குரியது. கட்சியினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால், பாஜகவால் ஈடுகட்ட முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையுடன் செயல்படுவதே நல்லது.
ஜெயலலிதா போன்ற தலைவர் யாரும் இல்லை, இனி பிறக்கவும் முடியாது. அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் பேசட்டும், ஆனால் ஜெயலலிதா மாதிரி என பேச வேண்டாம். அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து பேச விரும்பவில்லை. ஆனால், ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை. தலைவர்களே தொண்டர்களின் உணர்ச்சிகளை தூண்டக்கூடாது.
கல் வீசினால் உடைவதற்கு அதிமுக ஒன்றும் கண்ணாடி அல்ல, சமுத்திரம், பாஜகவில் இருந்து விருப்பப்பட்டு அதிமுகவில் இணைபவர்களை ஏற்பது அரசியல் பக்குவம்.
இணைப்பை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அணுக கூடாது. அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் பிற கட்சியினர் அதிமுகவில் இணைகின்றனர். பாஜக மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் அதிமுகவில் இணைகின்றனர். பாஜக உடன் கூட்டணி தொடரும், அதில் மாற்றமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.