கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு பெஞ்ச் பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல் சி.ஏ.சுந்தரம், சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சிவில் வழக்கு தொடர்ந்ததையும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட விபரத்தையும் எடுத்து கூறினார்கள்.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். அந்த பதவி 2026-ம் ஆண்டு வரை உள்ளது என்று வைரமுத்து தரப்பு வக்கீல் ரஞ்சித் குமார் கூறினார். ஆனால் இருவரும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டது செயற்குழுவில் தான். அதற்கு பொதுக் குழுவின் ஒப்புதல் தேவை என்றார். அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணாக கூட்டப்பட்டதாகவும், தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளரை அந்த பொதுக்குழுவில் நீக்கி இருக்கிறார்கள். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுக்குழு அவரை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை நீட்டிக்க விரும்பவில்லை. இந்த வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். வைரமுத்து தரப்பில் 45 நிமிடங்கள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மணி நேரம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 30 நிமிடம் வாதிடுவதற்கு நேரம் கேட்டுள்ளார்கள். இந்த பரபரப்பான கட்டத்தில் இன்று பிற்பகலில் மீண்டும் விசாரணை தொடங்கியது.
வைரமுத்து தரப்பில் வக்கீலு் வாதிடும்போது, ஓபிஎஸ்ஐ அடிப்படை உறுப்பினர், பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உள்ளனர். 2017 வரை பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளருக்கு மாற்றப்பட்டுள்ளது.. கட்சியின் பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தது. நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாதவற்றை பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றி உள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி மட்டுமே போட்டியிட முடியும் என்ற அளவுக்கு 10 மாவட்ட செயலாளர் பரிந்துரைக்க வேண்டும் 10 ஆண்டுகள் கட்சியில் இருக்க வேண்டும் என்ற அளவுக்கு விதிமுறைகள் தற்போது திருத்தப்பட்டு உள்ளன. இந்த திருத்தத்திற்கு முன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்று சரமாரி வாதங்களை முன் வைத்தார்.
அவைத்தலைவரின் பொறுப்பு என்ன என்று நீதிபதி கேட்டார். பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்குபவரே அவைத்தலைவர். என்று வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார்.
அதைத்தொடர்ந்து எடப்பாடி தரப்பு வழக்கறிஞரும் வாதங்களை முன் வைத்தார். தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. வாதங்கள் நாளையும் தொடரும் என தெரிகிறது.