சென்னை வானகரத்தில் ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17ம் தேதி அளித்த தீா்ப்பில், ஜூலை 11 அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீா்ப்பை ரத்து செய்ததுடன், ஜூலை 11 ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீா்ப்பளித்தனர்.
இந்த தீா்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமா்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு டிசம்பர் 15ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, நேரமின்மை காரணமாக, வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்ட போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரஉத்தரவிட்டனர். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதேபோல் விசாரணைக்குள் எழுத்துப்பூர்வமான அனைத்து வாதங்களையும் தாக்கல் செய்வதை இரு தரப்பும் உறுதி செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசியத்தை அறிய விரும்புகிறோம் என நீதிபதிகள் விவாதத்தை தொடங்கினர். அதைத்தொடர்ந்து இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதத்தை முன் வைத்து வருகிறார்கள். சுமார் 2 மணி நேரம் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர் வழக்கை நாளை பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். விசாரணையை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்கள் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று வழக்கு விசாரணை அதிமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.