அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில். தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது. அதன்படி எழுத்துபூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு அளித்தார்.
பொதுக்குழு தீர்மானங்கள், மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க கோர்ட் மறுத்து விட்டது. ஓபிஎஸ் உள்ளிட்டவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த தீர்ப்பால் ஓபிஎஸ் தரப்புக்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடிக்கு இது பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி கோர்ட் வளாகம் மற்றும் அதனை சுற்றிலும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர்.