Skip to content
Home » அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஆகியோர் 16-ந்தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.  இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக தங்கள் தரப்பு பதில் மனுக்களை எழுத்துப்பூர்வ பதிலாக நேற்று தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 39 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 18 பக்கங்களை கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை பதில் மனுவில் விரிவாககுறிப்பிட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கீழ்க்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:- 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனேயே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வில் பொதுக்குழுவே உச்சபட்ச அங்கீகாரம் படைத்த அமைப்பாகும்.  இதுபோன்ற விரிவான  39பக்க விரிவான அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பிலும் விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 2-வது வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அரசியல் களத்திலும் பலத்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!