கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து அதிமுகவினர் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு முன்னதாக பேசவேண்டும் என சபையில் எழும்பி பேசுவதும் பின்னர் கோஷம் போடுவதுமாக கடந்த 3 தினங்களாக சபை நடவடிக்கையில் பங்கேற்காமல் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர். இன்றும் அவர்கள் வழக்கம் போல கேள்வி நேரத்தின்போது பேச முயன்றனர்.
அப்போது சபாநாயகர் கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிக்கிறேன் என்றார். அதை கேட்காமல் வழக்கம் போல அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனவே அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது அதிமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என கோஷம் போட்டனர்.
அப்போது சபை காவலர்கள் வந்து அதிமுகவினரை வெளியேற்றினர். இன்றும் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் கோஷம் போட்டபடியே வெளியேறினர். வெளியே வந்தும் சட்டமன்ற வளாகத்தில் நின்று கோஷம் போட்டனர். பின்னர் எடப்பாடி பேட்டி அளித்தார்.