நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு உள்ளிட்ட பல குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், தங்கமணி ஆகியோர் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இவர்கள் பாமக, தேமுதிக நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டனர். இதில் மேற்கண்ட இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிகிறது. பாமக 7 மக்களவை தொகுதிகளையும், 1 ராஜ்ய சபா சீட்டையும் கேட்டு உள்ளது. தேமுதிக 4 மக்களை தொகுதிகளை கேட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் பேசிவிட்டு சாதகமான முடிவை அறிவிப்பதாக அந்த குழுவினர் தெரிவித்து விட்டு வந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் விரைவில் இவர்கள் எடப்பாடியுடன் பேசிய பிறகு மேற்கண்ட கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசி ஒப்பந்தம் போடுவார்கள் என கூறப்படுகிறது. இது தவிர பூவை ஜெகன் மூர்த்தியின் கட்சி, எஸ்.டிபிஐ , , புதிய தமிழகம் கட்சியும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவிடம் உள்ளது. எனவே எடப்பாடி கூறியபடி அதிமுகவும் மெகா கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது. அதிமுக மொத்தம் 25 தொகுதிகளில் போட்டியிடவும், புதுவை உள்பட 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது.
ஜிகே வாசன் தலைமையிலான தமாகா,பாஜகவுடன் தான் கூட்டணி சேரும் என தெரிகிறது. அதுபோல பாரிவேந்தரின் ஐஜேகேவும் பாஜகவுடன் சேரும் என தெரிகிறது. பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என ஏற்கனவே பாரிவேந்தர் அறிவித்திருந்தார். எனவே தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி சேரும் நிலையில் பிரதான கட்சிகள் எதுவும் இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளது.