அ திமுகவை பொறுத்தவரை பாஜக கூட்டணி முறிந்து விட்டது என உயர்மட்ட தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்கிட தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். ஏற்கனவே அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறும்போது, நாம் பி்ரிந்து இருந்தால் திமுக வெற்றி பெற்றுவிடும் என்று கூறி இருந்தார். எனவே அவர் அதிமுக, பாஜக கூட்டணி குறித்து தான் பேசியிருப்பார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் டில்லியில் இன்று வாசன், பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் சென்னை அமைந்தகரையில் நடந்த பாஜக தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றனர். அதிமுக, பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுமா என்று அரவிந்த மேனனிடம் கேட்டதற்கு, எங்கள் கதவு எப்போதும் திறந்திருக்கிறது. மோடியை பிரதமர் பதவியில் அமர்த்த கருத்து உள்ளவர்கள் எங்களுடன் வரலாம். அதிமுக எங்களுடன் வருமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார். இந்த பதில் மூலம் அதிமுகவுடன் மீண்டும் பாஜக பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.