அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே பொதுச்செயலாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்க அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று கூடியது. கட்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளடக்கிய 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும். 2 கோடி புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க இலக்கு வைத்து உழைக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தும், எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் ஈபிஎஸ் அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் என குறிப்பிட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.