எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த வகையில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்த திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பதால் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணிகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காலியாக உள்ள மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்டத்தில் இருந்து மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் அழைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. அதே போல் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் இருந்து திருஞானசம்மந்தம், தஞ்சை வடக்கு மாவட்டத்தில் இருந்துராம்குமார், தேனி மாவட்டத்தில் இருந்து ஜக்கையன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு அழைக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சியைச் சேர்ந்த கேபிள் சீனிவாசன் ஏற்கனவே திருச்சி மாநகர் மாவட்ட ஜெ பேரவை செயலாளராக இருந்தவர். பின்னர் அமமுகவில் சேர்ந்து மாவட்ட செயலாளராக இருந்தவர். அதிமுகவில் சேர்ந்த சீனிவாசனுக்கு இளைஞரணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது…