நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும் என உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயிலடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காமராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,….
ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அதனால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற ஒரே குரலாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எழுப்பினர். அதற்கு ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் போன்றவர்கள் இடையூறு செய்தனர்.
இந்த இயக்கத்துக்கு ஒற்றைத் தலைமை வரக்கூடாது என எண்ணி நீதிமன்றங்களையும் நாடினர். அனைத்திலும் வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி என்பது பெருமைக்குரியது. இப்போது வந்துள்ள தீர்ப்பு மூலம் நியாயமும், நேர்மையும் வென்றுள்ளது. எனவே, எடப்பாடி பழனிசாமியால் டெல்டா மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்கள் என அனைத்தும் அதிமுகவின் கோட்டையாக உள்ளது.
இத்தீர்ப்பு மூலம் வருகிற நாடாமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என்பதற்கு அச்சாரமாக உள்ளது. மதுரை மாநாட்டில் 15 லட்சம் பேர் கூடியது அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளனர். எனவே எழுச்சி மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் பேசுகின்றனர் என்றார். பால் வளத் தலைவர் ஆர். காந்தி, முன்னாள் பகுதிச் செயலர் என்.எஸ். சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.