இஸ்ரோவின் நிலவு திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வரும் செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு செலுத்தப்படும்.
ஆதித்யா விண்கலத்தின் முதல்கட்ட சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டது. இது பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.