தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய நான்கு இடங்களில் அசோகன் தங்க மாளிகை கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற பல்வேறு விளம்பரங்களை அறிவித்தது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர். அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இத்தகவல் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளும் பூட்டப்பட்டன. இதனால் இந்த கடைகளில் சிறுசேமிப்பு, நகை அடகு வைத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்நது நகைக்கடை உரிமையாளர் மீது அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அந்த நான்கு நகைக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக் கடைகளில் ஏதாவது நகைகள், ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்ய பட்டுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர். கடையின் உள்ளே நகைகள், ஆவணங்கள் ஏதும் உள்ளதா என சோதனை மேற்கொண்டனர்.
சோதனை நடந்த போது உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.