தமிழ், தெலுங்கு, கன்னடம் . இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சவுந்தர்யா. கர்நாடகத்தை சேர்ந்தவர். தமிழில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்தார். இவர் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 31. சவுந்தர்யா பொறியாளர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் 2004 இறக்கும் போது கர்ப்பமாக இருந்தார்.
2004 மக்களவை தேர்தலின்போது கர்நாடகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கரீம்நகருக்கு பாஜக, தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக கரீம்நகருக்கு ஹெலிகாப்டரின் சென்ற போதுதான் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டது. இந்த விபத்தில் சவுந்தாயாவின் உடல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவர் இறப்பு விபத்தல்ல, கொலை என ஆந்திராவை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிட்டிமல்லு. இவர் தனது புகாரில், “நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தால் நடந்தது இல்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது.
அந்த நிலத்தை வாங்க நடிகர் மோகன் பாபு முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார். இந்த நிலையில் சவுந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார்.
எனவே இந்த நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், ராணுவத்தினர், போலீஸார் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என தனது புகாரில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார். இந்த 6 ஏக்கர் நிலத்திற்காக இரு தரப்புக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டதையும் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை கம்மம் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி ஆணையருக்கும் அனுப்பியுள்ளார். இந்த நில அபகரிப்பு விவகாரத்தில் மோகன் பாபுவை அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த புகாரால் தனக்கு மோகன் பாபு தரப்பிடம் இருந்து மிரட்டல்கள் வரலாம் என்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகார் குறித்து மோகன் பாபுவோ அவரை சார்ந்தவர்களோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.