சில திரை நட்சத்திரங்கள், வீரர், வீராங்கனைகள் விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்கள். குறிப்பாக ஆன் லைன் சூதாட்டத்தில் சில வீரர்கள் நடித்து கோடிகோடியாக சம்பாதிக்கிறார்கள். சிலர் போலி நிறுவனங்கள் என்று தெரிந்தே அதில் நடிப்பார்கள். காரணம் பணம் ஒன்று தான் அவர்களுக்கு குறிக்கோள்.
ஆனால் தமி்ழகத்தை சேர்ந்த அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த நடிகை சாய்பல்லவி, இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். டாக்டரான அவர் சினிமாவிலும் தனது கொள்கையை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.பணத்தை விட சமூக நலனில் அவர் அக்கறை கொண்டவர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.
அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் விளம்பர நிறுவனமொன்று நடிகை சாய்பல்லவியிடம் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளது.அதற்கு ரூ.2 கோடி சம்பளம் தருவதாகவும் தெரிவித்தது. ஆனால் அந்த விளம்பர படத்தில் நடிக்க முடியாது என்று சாய்பல்லவி மறுத்துவிட்டாராம்.
டாக்டருக்கு படித்தவராக இருந்தாலும் நடிகை சாய்பல்லவி மேக்கப் போடுவதில் பெரும் நேரத்தை செலவிடமாட்டார். முகத்தில் மேக்கப் போடுவதும் அவருக்கு பிடிக்காது. சினிமாவிலும் மேக்கப் இல்லாமலேயே நடிக்க விரும்புவார்.அழகு சாதன பொருட்களில் இருக்கும் தீமைகளை உணர்ந்து அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். 2 கோடிக்காக நான் அதில் நடித்து, ஒரு டாக்டரே சொல்கிறார் என அந்த பொருளை மக்கள் வாங்கி தங்களை கெடுத்துக்கொள்ள நான் காரணமாக இருக்கவேண்டுமா என சிந்தித்து அவர் மறுத்தாராம். ரூ.2 கோடி கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி செயலுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டுமழை பொழிந்து வருகிறார்கள்.