காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார். சினிமா நடிகை. பாஜகவில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக உள்ளார். ,இவர் பஸ்சில் தொங்கிய மாணவர்களை தடுத்து விரட்டியவர். இவர் பாஜகவில் இருந்து இன்று விலகினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.,வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய நான் பா.ஜ.,வில் இருந்து விடைபெறுகிறேன்.தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தை காக்கின்ற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப் பணியாக செய்து கடமையாற்றி விடலாம் என கருதித்தான் இந்த கட்சியில் இணைந்தேன், இயங்கினேன்.
பெண்கள் அரசியல் ஆளுமைகளாக மாறுவது அரிதான காரியம், அரிதிலும் அரிதாக ஓரிருவர் முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை தடுத்து முட்டுக்கட்டை போடுவது என்பது பெண்களின் அரசியல் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது. இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புரட்சிப் பயணம், அது எழுச்சிப் பயணம், வரும் காலங்களில் இனி அதுவே வெற்றிப் பயணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.