மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ளது உலக புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தினால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம், எனவே சஷ்டியப்தபூர்த்தி விழா உள்ளிட்ட திருமண விழாக்களை இங்கு கொண்டாடுவார்கள். இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருவார்கள்.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் ரவி ராஜா பினி செட்டி அவரது மனைவி ராதா ராணி பினி செட்டியின் 76 வது வயது பூர்த்தியான விஜயரத சாந்தி விழா இங்கு நேற்று நடைபெற்றது. இதில் இவர்களது மூத்த மகன் திரைப்பட இயக்குனர் சத்திய பிரதாஸ், இளைய மகனும் நடிகருமான ஆதி அவரது மனைவி நடிகை நிக்கி கல்ராணி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
ஆலயத்தில் கோபூஜை கஜ பூஜை செய்தபோது நடிகை நிக்கி கல்ராணி கோயில் யானை அபிராமியை வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். அப்போது யானையின்தும்பிக்கையை தடவி கொடுத்து கொஞ்சி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் மாமியார் ராதா ராணிக்கு கால் மற்றும் முகத்தில் மஞ்சள் தடவினார். அப்போது ஆதி மற்றும் நிக்கி கல்ராணி மாலை மாற்றி கொண்டனர். நடிகர் ஆதி நிக்கி கல்ராணிக்கு நெற்றியில் திலகமிட்டு மகிழ்ந்தார்.
தொடர்ந்து விழா வைபவத்தில் தம்பதிகள் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவத்தின் போது நிக்கி கல்ராணி உற்சாக குரல் எழுப்பினார். நடிகர் ஆதி பெற்றோர்களுக்கு இனிப்புகள் ஊட்டி விட்டார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த குடும்பத்தினரை காண ரசிகர்கள் குவிந்தனர். ஏராளமான ரசிகர்கள் நடிகர் ஆதியுடனும் நடிகை நிக்கி கல்ராணியுடனும் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
ரசிகர்களின் செல்போனை வாங்கி செல்பி எடுத்துக் கொடுத்து மகிழ்வித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதி மற்றும் நிக்கி கல்ராணி கூறுகையில் திருக்கடையூர் கோயிலுக்கு வரவேண்டும் என்பதே எனது அம்மாவின் நீண்ட நாள் ஆசை. தற்போது தந்தையின் 75 வது பிறந்தநாள் விழாவுக்கு வந்து விஜயரத சாந்தி விழா கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.
பூஜைகளை சிறப்பாக நடத்தினர். முதல்முறையாக திருக்கடையூர் வந்துள்ளோம். சப்தம் என்ற படத்தில் நடித்துள்ளேன் செப்டம்பரில் வெளிவர உள்ளது. மரகத நாணயம் இரண்டாவது பாகத்தில் நடிக்க உள்ளோம். மகேஷ்சபா என்ற படம் முடித்துள்ளேன் என்றார். நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு ஒரு குடிமகனாக நல்லது செய்பவர்களை ஆதரிப்போம். நடிகர் விஜய்யும் நல்லது செய்வார் என்றார்.