இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி(50) பங்கேற்றார். தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையானதால், கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அடுத்த நாளே, செய்தியாளர் சந்திப்பில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். எனினும் அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, கலவரத்தை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியிருந்தார். அதில் நீதிபதி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவிட்டு மனுவை நிராகரித்தார். போலீசார் அவருக்கு சம்மன் கொடுக்கச் சென்ற போது நடிகை கஸ்தூரி தலைமறைவானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஸ்தூரியை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். இந்நிலையில், ஐதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழக போலீசார் ஆந்திராவில் முகாமிட்டு தங்கியிருந்தனர். இந்நிலையில் ஐதராபாத்தில் பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரியை சென்னை போலீஸ் கைது செய்தது. ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை போலீசார் தற்போது சென்னை அழைத்து வந்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கஸ்தூரி எழும்பூர் குற்றவியல நீதிமன்றம் 5 எண்ணில் நீதிபதி ரகுபதி ராஜா முன்னியைில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நடிகை கஸ்தூரி புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.