நடிகை கஸ்தூரி அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும் கடும் கண்டனங்கள் குவிந்தன. தமிழக பாஜகவும் நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. சர்ச்சை பேச்சு தொடர்பாக கஸ்தூரியை கைது செய்ய வேண்டும் என சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நடிகை கஸ்தூரி தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரினார். எனினும், அவர் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை வீட்டை பூட்டி விட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..