டில்லியில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக நடிகையும், பா.ஜ., எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அப்போது மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவில் வங்கதேசத்தில் நடந்தது போன்ற சூழலை உருவாக்கியிருப்பார்கள். அது சார்ந்த திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தனர்” என பேசியிருந்தார். கங்கனாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் மட்டுமல்லாமல் பா.ஜ., கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பின. பஞ்சாப் பா.ஜ., மூத்த தலைவர் ஹர்ஜித் கரேவால், ”மாண்டி தொகுதி எம்.பி., கங்கனா ரணாவத், எரிச்சலூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். விவசாயிகளைப் பற்றிப் பேசுவது கங்கனாவின் துறை அல்ல, கங்கனாவின் அறிக்கை அவரின் தனிப்பட்ட கருத்து” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், பா.ஜ., தரப்பில் வெளியான அறிக்கையில், ”பா.ஜ., கட்சியின் கொள்கை விஷயங்களை பற்றி பேசுவதற்கோ, அறிக்கை வெளியிடவோ கங்கனாவுக்கு அதிகாரமும் இல்லை, அவருக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கங்கனா ரணாவத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.