பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். சிவந்தமண் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து பட்டத்து ராணி பார்க்கும் பார்வை என்ற பாடலுக்கு நடனமாடியவர் காஞ்சனா.
திருப்பதி கோவிலுக்கு சென்னையில் இருந்த பல கோடி மதிப்புள்ள தனது சொந்த நிலத்தை கொடுத்தவர். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்த பிரபல டைரக்டர் ராஜமவுலியை காஞ்சனா விமர்சித்து உள்ளார். இதுகுறித்து காஞ்சனா அளித்துள்ள பேட்டியில், “பாகுபலி படம் எடுத்தபோது அந்த படத்தின் இயக்குனரான ராஜமவுலி என்னை அணுகி இரண்டு நாள் நடிக்க கால்ஷீட் கேட்டார். அதற்கு நான் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டேன். அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு கொடுக்க முடியாது என்று சொல்லி என்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.
என்னைப் போன்ற ஒரு சீனியர் நடிகைக்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாத நிலையில் ராஜமவுலி இருக்கிறாரா? ரூ.5 லட்சம் என்பது அவருக்கு பெரிய தொகையா. என்னை போன்ற நடிகைக்கு கொடுத்தால் எவ்வளவு பேருக்கு உபயோகப்படும். ஏன் கொடுக்கவில்லை” என்று சாடியுள்ளார்.