இந்திய சினிமாவில் 70 மற்றும் 80களில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து உள்ளார். இந்தியில் வெளியான சர்கம் என்ற திரைப்படத்தின் மூலம் குறுகிய காலத்தில் பாலிவுட்டில் ஒரு நடிகையாக தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
பின்னர், என்.டி ராமா ராவின் தெலுங்கு தேசக் கட்சியில் 1994ம் ஆண்டு ஜெயப்பிரதா தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அந்த கட்சியிலிருந்து விலகி சந்திரபாபு நாயுடு பிரிவில் இணைத்துக் கொண்டார்.சந்திரபாபு நாயுடுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரிடமும் இருந்து விலகினார். அதன் பின்னர் சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2004 ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தலின் போது ராம்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏறத்தாழ 30 ஆண்டுகளில் 300 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ராம் குமார், ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து, அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ., தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை எதிர்த்து, ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவரும், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணையின் போது எழும்பூர் நீதிமன்றத்தில், ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையைச் செலுத்திவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.. இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.