மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான ஒருவர் அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். யார் அந்த நடிகை? என்ன புகார் அளித்தார்? என்பது குறித்த முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமானவர் காதம்பரி ஜேத்வானி. இவர் கடந்த ஆண்டு மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார்.அதனைத்தொடர்ந்து, இந்த புகாரை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மோசடி செய்ததாக அப்போது ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகை மீது போலீசில் புகார் செய்தார்.
இதனையடுத்து, நடிகை மீது வழக்குப்பதிவு செய்யாமலேயே ஆந்திரா போலீசார் காதம்பரியை கைது செய்தனர். அத்துடன், அதிகாரி மீது அளித்த புகாரை வாபஸ் பெறவும் போலீசார் துன்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து, புகாரை வாபஸ் பெற்ற நடிகை காதம்பரி ஜேத்வானி ஜாமீனில் வெளிவந்தார்.
தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் வந்தநிலையில், பொய் வழக்கில் தன்னை கைது செய்து போலீசார் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி ஆந்திரா போலீசில் நடிகை புகார்அளித்தார். இந்த புகாரையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார், அப்போது மாநில உளவுத்துறை டி.ஜி.பி. யாக இருந்த சீதாராம ஆஞ்சநேயலு, முன்னாள் விஜயவாடா கமிஷனர் கிராந்தி ராணா டாடா, துணை கமிஷனர் விஷால் குன்னி ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவசர கைது மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் சஸ்பெண்டு செய்து மாநில அரசு உத்தரவிட்டது.
நடிகை காதம்பரி ஜேத்வானி கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘சத்தா அட்டா’ என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பஞ்சாபி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார்.