உலகப்புகழ் பெற்ற பெரிய கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு யோகி பாபு வந்தார். அவருடன் தஞ்சையின் பிரபல தொழிலதிபரும், களவாணி 2ல் நடித்து பிரபலமான நடிகருமான துரை.சுதாகரும் உடன் வந்தார். புதிய திரைப்பட படப்பிடிப்புக்காக வந்த நடிகர் யோகி பாபு பெரிய கோயுலுக்கு திடீரென நேற்று இரவு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலை இருவரும் வலம் வந்தனர். அப்போது கோயிலில் இருந்த மக்கள் யோகி பாபுவை பார்த்தவுடன் மகிழ்ச்சி குரல் எழுப்பினர். மிகவும் எளிமையாக மக்களுடன் யோகிபாபுவும், நடிகர் துரை. சுதாகரும் இயல்பாக பேசியபடி வந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் இருவருடனும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறிய யோகிபாபு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா ஒரு நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய யோகிபாபு, இயக்குனர் அமீர் நடித்த யோகி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் இருந்துதான் தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார். பல போராட்டங்களுக்கு பின்னர் பையா திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர் சி யின் கலகலப்பு திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்திலும், வேலாயுதம், அட்டகத்தி, சூது கவ்வும், பட்டத்து யானை என பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
2014 ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள “வௌவால்” கதாபாத்திரம் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அரண்மனை, ஜெய் ஹிந்த் 2 போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்தி சினிமாவிலும் நடித்துள்ள யோகி பாபு கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முக்கிய அங்கமாக மாறிவிட்டார் யோகி பாபு.
இவருடன் வந்த தஞ்சையின் பிரபல தொழில்அதிபரும், நடிகருமான துரை. சுதாகரும் தஞ்சை மக்களுக்கு வெகு பரிட்சயம் ஆனவர்தான். இவரும் தற்போது கோலிவுட்டில் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.