தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் யோகி பாபு. அதன்பிறகு அவர் காமெடி நடிகராக வலம் வந்தார். தற்போது காமெடி நடிகராவும், ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியாக வலம் வரும் நடிகராக யோகி பாபு மாறி உள்ளது. தற்போது நடிகர் யோகி பாபுவின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே நடந்து வருகிறது. தமிழ்நாடு கேரளா எல்லையில் கேரளாவுக்கு சொந்தமான கும்பாவுருட்டி அருவி மற்றும் அதனை சுற்றிய வனப்பகுதியில் சூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, 96 திரைப்பட புகழ் கவுரி கிஷன் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள ‛போட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகை கவுரி கிஷன், இயக்குநர் சிம்புதேவன், நடிகர் எம்எஸ் பாஸ்கர், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதில் தாமதமாக யோகி பாபு வந்தார். மாலை 6 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் என கூறப்பட்ட நிலையில் யோகி பாபு மிகவும் தாமதமாக வந்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு இரவு 9 மணிக்கு யோகி பாபு வந்தார். மேடை ஏறிய யோகி பாபுவிடம் தாமதமாக வந்தது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு யோகி பாபு, “நேற்று முன்தினம் குற்றாலத்தில் சூட்டிங் இருந்தது. பத்து மணி நேரம் காரில் பயணம் செய்து தான் புரொமோஷனில் பங்கேற்றேன். எல்லா கம்பெனியும் எல்லா நேரமும் அட்ஜெஸ்ட் பண்ணமாட்டார்கள். எனது சூழ்நிலை அப்படி மாட்டிக் கொண்டேன். அந்த ஹீரோவுக்கு வேற இன்னும் 2, 3 நாளில் கல்யாணம் ஆகப்போகிறது. இதனால் முடித்து கொடுத்துவிட்டு செல்லுங்கள் என சொல்லிவிட்டனர். யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.எப்போதும் உங்கள் சப்போர்ட் எனக்கு வேண்டும். ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப கடின உழைப்புடன் உருவான படம் இது. இதனை நீங்கள் தான் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். ரொம்ப ரொம்ப நன்றி. தாமதமாக வந்ததற்கு மன்னித்து விடுங்கள். ரொம்ப ஸாரிங்க” என்றார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் 6 மணி என்று சொன்னீர்கள். ஆனால் 3 மணிநேரம் தாமதித்து 9 மணிக்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு வேலை இருப்பது போல் எங்களுக்கும் வேலை இருக்காதா?” என்று கேள்வி கேட்டார். அதற்கு யோகி பாபு, ‛‛எனக்கு நேரம் எதுவும் சொல்லவில்லை. அதேவேளையில் என்னுடைய சூழ்நிலையை நான் கூறிவிட்டேன். அதற்கு நீங்கள் வாருங்கள்.. பார்த்து கொள்ளலாம் என கூறினார்கள். எல்லா சிக்னலுக்கும் சென்று நான் கேட்க முடியாது இல்லையா?. நான் காரில் தானே வருகிறேன். நீங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது. கொஞ்சம் நிதானமாக கேளுங்கள். உங்களின் கோபம் புரிகிறது. அதற்கு தான் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன்” என்றார். அதன்பிறகு யோகி பாபு தனது பேச்சை முடித்துவிட்டு நன்றி கூறிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நடிகர் சங்க தலைவராக போவதாக ஒரு தகவல் இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார். அதனை கேட்டதும் சிரித்த யோகி பாபு, பத்திரிகையாளர் இருக்கும் இடத்தை நோக்கி சொடக்குப்போட்டு, ‛‛மைக்கை ஆஃப் பண்ணிட்டு வெளியே வா.. நான் பேசுறேன்” எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.