10, 12ம் வகுப்புகளில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை நடிகர் விஜய் கடந்த மாதம் 18ம் தேதி சென்னைக்கு அழைத்து பரிசு , சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடத்தினார். பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைரநெக்லஸ் வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை படிக்க வேண்டும் என்றார். வழக்கமாக மாணவர்களை கவுரவிப்பவர்கள் பல்கலைக்கழக அளவில், அல்லது மாவட்ட அளவில் கவுரவிப்பார்கள். ஆனால் விஜய் சட்டமன்ற தொகுதி வாரியாக அழைத்து பரிசு வழங்கியது அவர் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அரசியல் பிரவேசத்திற்கு பிள்ளையார் சுழிபோட்டதாகவே பெரும்பாலான அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் அவர் தற்போதைய தலைவர்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் மறைந்த மூன்று தலைவர்கள் பற்றியே பேசினார். எனவே இப்போதுள்ள எந்த கட்சியையும் அவர் ஆதரிக்கவில்லை, புதிய சித்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலுக்கு தன்னை ஆயத்தப்படுத்தும் வகையில் 2024 ஜனவரிக்கு பிறகு 2026 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரைபுதிய படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு அடுத்ததாக வெங்கட்பிரபுவின் புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தம் ஆகி உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்கி ஜனவரிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு அவர் புதிய படங்களில் நடிக்க மாட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது. தமிழ்த்திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய். அவ்வளவு பெரிய தொகை வாங்கும் நடிகர், ஏன் அதை வெறுத்து அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார் என்பது சினிமா வட்டாரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது அவர் தமிழகத்தில் பிரசாரம் செய்ய வந்தார், அப்போது நடிகர் விஜயை அழைத்து பேசினார். இந்த சந்திப்பு கோவையில் நடந்தது. அதன்பிறகு இவர்கள் சந்தித்தது பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனாலும் நடிகர் விஜய்க்கு பாரதிய ஜனதாவின் மறைமுக ஆசி இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த். இவர் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. இவர் இப்போதும் புதுச்சேரி பாஜக நிர்வாகிகளுடன் நல்ல தொடர்பில் உள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடனும் நெருக்கமாக உள்ளார்.
தமிழகத்தில் எப்படியும் காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் தீராத ஆசையை நிறைவேற்ற அதிமுகவை, பாஜக ஆக்ரமிப்பு செய்தது. அதைவைத்து இந்த மக்களவை தேர்தலை சந்திக்கலாம். அதன் பிறகு 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவையும் கழற்றிவிட்டு விட்டு, விஜய் மூலம் தேர்தலை சந்திக்க அசைன்மென்ட் தயாரித்துள்ள பாஜக இதை புதுச்சேரி வழியாக தமிழகத்திற்கு கடத்தி வந்துள்ளது.
அதன் முதல்கட்ட வேலை தான் கடந்த மாதம் மாணவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழா. இன்னும் இதுபோல பல சேவைகளை செய்யவும் விஜய் திட்டங்கள் வைத்துள்ளாராம். அடுத்த ஜனவரி முதல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் முழுநேர அரசியலில் குதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை தமிழகத்தில் புதியஅரசியல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த நடிகரும் கரைசேர்ந்ததில்லை. எம்.ஜிஆரும் 25 வருடங்களுக்கு மேலாக திமுகவில் இருந்து தன்னை வளர்த்துக்கொண்டவர்.