தமிழகத்தில் கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 10, மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ரொக்கப்பரிசு, மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறார்.
இதற்காக வரும் 17ம் தேதி மேற்கண்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் அழைக்கப்பட்டு உள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டர் என்ற இடத்தில் இதற்கான விழா நடக்கிறது. இந்த தகவலை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குபவர்கள் மாநில அளவில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்குவார்கள், அல்லது மாவட்ட அளவில் சாதனையாளர்களுக்கு பரிசு, பாராட்டு வழங்குவார்கள். இப்போது நடிகர் விஜய் புதுமையாக தொகுதி வாரியாக என அறிவித்து உள்ளார். அது சட்டமன்ற தொகுதியா, அல்லது மக்களவை தொகுதியா என்பது சொல்லப்படவில்லை.
சட்டமன்ற தொகுதி என்றால் தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. இது தவிர புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகள் உள்ளன. ஆனால் புஸ்ஸி ஆனந்த் அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் என கூறப்பட்டு உள்ளதால், இதில் புதுச்சேரிக்கு இடம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.ஆனால் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியை சேர்ந்தவர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்றவர்களை தேர்வு செய்வது குழப்பமான காரியம். அதிக மார்க் பெற்றவர்கள் பட்டியல் கல்வித்துறை அலுவலகத்தில் தான் பெற முடியும். அந்த கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு இந்த ஊர் எந்த தொகுதி என்பது எப்படி தெரியும் , அவர்கள் இதுபற்றி விசாரித்து பட்டியல் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை.
சட்டமன்ற தொகுதி வாரியாக , நடிகர் விஜய் பரிசு கொடுப்பது, அரசியல் முன்னோட்டமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு தான் நடத்தப்பட்டது. அந்த மாணவர்களையும் அழைத்திருக்க வேண்டும் என்று 11ம் வகுப்பில் அதிக மார்க் பெற்றவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்களை கவுரவிப்பது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.