நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலைக் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு வதந்திகள் இணையத்தில் உலா ,வருகின்றன. இதனையொட்டி பலரும் நேர்காணல்கள் அளித்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் ஸ்ரீ-யின் நெருங்கிய நண்பரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, அதில் கூறியிருப்பதாவது:
“தற்போது நடிகர் ஸ்ரீக்கு மருத்துவ நிபுணர் சிகிச்சை அளித்து வருகிறார். அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிலகாலம் விலகி இருக்கிறார் என்பதை அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீ குணமடைந்து இயல்பு வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் அவருக்கு இப்போது பிரைவசி தேவைப்படுவதை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீ-யின் நிலை குறித்த ஊடகங்களின் செய்திகளும், பரவும் தவறான தகவல்களும் மிகவும் வேதனை அளிக்கின்றன. மேலும், ஸ்ரீ-யின் உடல் நிலை குறித்த வதந்திகள், தவறான செய்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு இணைய ஊடகங்கள் மற்றும் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்ரீ-யின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அவர் தொடர்புடைய ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் அல்லது நேர்காணல்களை நீக்குமாறும், அவர் குணமடைவதில் கவனம் செலுத்தும் வேளையில் அவரது பிரைவசியை மதிக்குமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம். சில நபர்கள் நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை முழுமையாக மறுக்கிறோம். இந்தத் தருணத்தில் உங்களது தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.